fbpx
Others

ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் — கள்ளக்குறிச்சி விசாரணை…

.கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும் வகையில் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள ஒரு நபர் ஆணையத் தலைவர் உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் வெள்ளிக்கிழமை கள்ளக்குறிச்சி வந்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துறை அலுவலர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினர். அதைத் தொடர்ந்து கருணாபுரம் பகுதிக்கு நேரடியாகச் சென்று கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தோரின் குடும்பங்களைச் சந்தித்து பேசினார். ரமேஷை பறிகொடுத்த ரஷிதாவிடம் பேசி அவரது கருத்துகளை பதிவு செய்தார். இது தொடர்பாக ரஷிதா கூறும்போது, “கணவர் எப்படி இறந்தார் எனக் கேட்டார். சாராயம் அருந்தி உயிரிழந்ததாக தெரிவித்தேன். மேலும், உடல் வலிக்காக சாராயம் குடிக்கும் வழக்கம் அவருக்கு இருந்தது. சாராயம் அருந்திய அன்று, மாலையில் எனது கணவர், கண் தெரியவில்லை என்றார். அதையடுத்து மருத்துவமனைக்குச் சென்றார். எங்கள் வீட்டருகே எனது உறவினர் மகனும் மற்றொருவரும் இதேபோல் பாதிப்புக்கு உள்ளானார்கள். மருத்துவமனையில் எனது கணவர் இறந்த பிறகு பிரேதப் பரிசோதனை செய்யச் சொன்னேன். மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்ததுதான் அவருடைய இறப்புக்குக் காரணம் என்று தெரிந்தது. இதையெல்லாம் நீதிபதியிடம் எடுத்துச் சொல்லிவிட்டு சாராயத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டேன். நீதிபதியும் அனைத்து விவரத்தையும் சேகரித்து அறிக்கையாக அரசுக்கு தருவேன்” என்று கூறினார்.கருணாபுரத்தைத் தொடர்ந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நேரில் பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தேன். அதேபோன்று கிராமத்தில் இருப்பவர்களையும் சந்தித்துப் பேசினேன். ஆணையம் எடுத்து வரக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பாக விரைவில் தகவல் தெரிவிக்கப்படும். விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய மூன்று மாத கால அவகாசம் இருப்பதால், அதற்குள் முழுமையான அறிக்கையை தாக்கல் செய்வோம்” என்று அவர் கூறினார்.

 

 

Related Articles

Back to top button
Close
Close